இனப்படுகொலை செய்த இலங்கைக்கு அப்துல்கலாம் சென்றிருப்பது, அவர்கள் செய்யும் அநியாயங்களுக்கு நியாயம் கற்பிக்கும் விதமாக உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக திரைத்துறையினர் ராமேஸ்வரத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனர் அமீர் இன்று நீதிமன்றத்தில் நேர்நின்றனர்.
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திரைத்துறையினர் 2009ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பொதுக் கூட்டம் நடத்தினர். இந்தப் பொதுக்கூட்டத்தில் இயக்குனர்கள், நடிகர்கள் என திரைத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திரைப்பட இயக்குனர் அமீர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கில்; இருவரும் நீதிமன்றத்தில் நேர்நின்றனர். பிற செய்தியாளர்களை சந்தித்த சீமான், ராஜபக்ஷ ஒரு போர்க்குற்றவாளி என்றும், இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு என்றும் தெரிவித்த அவர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை சென்று ராஜபக்ஷவோடு கைகுலுக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
மேலும் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றபோது எவ்வித கருத்தும் தெரிவிக்காத அப்துல்கலாம் இப்போது இலங்கை சென்றிருப்பது பயனற்றது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment